சென்னை:
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்துக்கள் எனக்கே சொந்தம் என்று, ஜெ.வின் இணைபிரியா தோழியான சசிகலா தெரிவித்து உள்ளார். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மறைந்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா. ஜெ. உயிருடன் இருந்தபோதே, அவரை மிரட்டி அவரது சொத்துக்களை தன்வசப்படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது அதை உறுதி செய்யும் வகையில், அவர் வருமான வரித்துறை அளித்துள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினருக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை அதிரடியாக சோதனை நடத்தியது. அப்போது, பல ஆவணங்கள், சொத்துக்கள் பற்றிய குறிப்புகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர், சசிகலாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்த நோட்டீசுக்கு, தனது தரப்பிலான இறுதி விளக்க அறிக்கையை சசிகலா கடந்த 11ந்தேதி வருமான வரித்துறைக்கு அனுப்பி உள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ள பல தகவல்கள், தமிழக மக்களின் தலையை சுற்ற வைத்துள்ளது.
அதில், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட எல்லா சொத்துக்களுக்கும் தற்போது நானே உரிமையாளர் என்றும், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக இருந்த நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் நிறுவனங் களில் தான் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஜெயா ஃபார்ம் அவுஸ், ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் தான் பங்குதாரர் என்று தெரிவித்து உள்ளவர், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட நான்கு சொத்துக்களில் ஜெயலலிதா மரணம் அடையும் வரை பங்குதாரராக இருந்ததாகவும், அவர் மரணத்துக்குப் பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு, அதன் மொத்த உரிமையும் தன்னிடமே உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
அத்துடன், பிரபல சினிமா நிறுவனமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் 41 லட்சத்து 66 அயிரம் பங்குகள், ஆரே லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3.6 லட்சம் பங்கு, மேவிஸ் சாட்காமில் 7.02 பங்கு, ராம்ராஜ் அக்ரோ மில்ஸில் 36 ஆயிரம் பங்குகள் உள்பட தமிகத்தில் உள்ள ஏராளமான சொத்துக்கள் குறித்தும் தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், மன்னார்குடி மாபியா என்று அழைக்கப்படும் சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பது உறுதியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் ஏற்கனவே நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெயலலிதா சினிமாவில் நடித்து சேர்த்த சொத்துக்களையும், தனது சொத்துதான் என்று சசிகலா கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவின் இந்த சொத்து பட்டியல் அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.