சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 23ந்தேதி முதல்  மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. உடன் இணைக்கப்படும் என்று கூறினார்.

அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக,  சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக அரசு ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை வேறு பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறது என்று கூறியதுடன், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. இதன் மூலம் கல்வி கற்போரின் எண்ணிக்கையையும் உயர்த்தினார். அதனாலேயே நாட்டில் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஜெயலலிதாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத்தான் விழுப்புரத்தில் அவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆளுநரும் அதற்கு அனுமதி வழங்கினார். பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். சிண்டிகேட் உறுப்பினரும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல்கலைக்கழகத்தை முழுமையாக நிறுவ முடியாத சூழல் உண்டானது. ஆனால், புதிய திமுக அரசில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடராது, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று முதல்வரும் உயர் கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்தனர். அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இதற்கு நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே அவர்கள் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்திருக்கிறார்கள்”.

மேலும், ”அம்மா உணவகம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது ஏன் என்று நாட்டு மக்களுக்கே தெரியும். ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், அடிமட்டத்தில் இருப்போர் வயிறார, குறைந்த கட்டணத்தில் உண்ண வேண்டும் என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாய் உள்ளத்துடன் அம்மா உணவகத்தைத் தொடங்கினார். அதைக் கூட மூடுவேன் என்று சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாகத்தான் உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.