சென்னை,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 5ந்தேதி இரவு மரணத்தை தழுவிய ஜெயலலிதாவுக்கு தற்போது அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் நினைவிடம் அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்துக்குள்ளேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், அவரது நினைவை போற்றும் வகையில் சிறப்பான முறையில் நினைவிடம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமையவுள்ள நினைவிட கட்டமைப்பு குறித்த மாதிரி படம் ஒன்று வைரலாகப் பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேநேரம், எம்.ஜி.ஆர். சமாதி எவ்வாறு ஜெயலலிதாவால் சிறப்பாக அமைக்கப்பட்டதோ அதேபோல் ஜெயலலிதாவின் சமாதியையும் சிறப்புடன் அமைக்க அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அடுத்து வரும் அவரது முதலாவது நினைவு தினத்திற்கு முன்பாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.