சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்..
img-20161008-wa0034
மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அமைச்சர்களிடமும், மருத்தவர்களிடமும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கடந்த 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஓரிரு நாளில் குணமடைந்து வீட்டுக்குச்செல்வார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் சில நாட்களுக்கு முன் மேலும் சில நாட்களுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்று செய்தி வந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலேயே அவர் உடல் நலம் பெற்று திரும்ப தனது பணிகளை தொடர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்தினார். இப்போதும் அதே வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். அதன் அடிப்படையில்தான், அவரை சந்திக்க முடியாத நிலை என்றாலும் அங்கிருக்கும் மருத்துவர்கள், அமைச்சர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க கலைஞர் அனுப்பினார். அமைச்சர்கள்  ஓ.பன்னிர்செல்வம் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணைத்தலைவர் தம்பிதுரை ஆகியோரை சந்தித்தேன். முதல்வர் தேறி வருவதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
விரைவில் முதல்வர் நலமுடன் இல்லம் திரும்ப. திமுக சார்பிலும், கலைஞர் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அவருடன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வந்திருந்தனர்.