
சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு, விசாரணை ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இன்று விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணை ஆணைய நீதிபதி ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் இருந்து விசாரணையை ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவரது திடீர் பயணமாக கோவை சென்றுவிட்டதால், விசாரணை மேலும் தாமதமாகி உள்ளது.
தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைப் பெற்ற அவரை, கவர்னர், எதிர்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அவரை பார்த்துக் கொண்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்றனர். இது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன.
இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுக்குழுவும் செயற்குழுவும் கூடியது. அதில், சசிகலாவை தற்காலிக பொது செயலாளராக தேர்வு செய்தனர். பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்ற சில நாட்களில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர்.
அடுத்த சில நாட்களில் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, தனது மவுனத்தைக் கலைத்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக சொன்னார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பி.எஸ் பின்னால் 12 எம்.எல்.ஏ.க்கள் அணி வகுத்தனர். இரட்டை இலை சின்னம் முடங்கியது. இதனிடையே சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். எடப்பாடி பழனிச்சாமி இரு அணிகளையும் இணைக்க முயற்சி எடுத்தார்.
ஓபிஎஸ் தரப்பில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை எடப்பாடி தரப்பு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இரு அணிகளும் இணைந்தது. சசிகலா நியமனம் செய்த டிடிவி தினகரனை அவர்கள் ஒதுக்கி வைத்தனர்.
அடுத்தபடியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
நீதிபதி ஆறுமுகசாமிக்கு எழிலகத்தில் உள்ள கலச மாகாலில் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை 10 மணிக்கு கலச மகாலில் உள்ள அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்து போயஸ் கார்டன் சென்று விசாரணையை தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் இன்று தனது விசாரணையை தொடங்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விளக்கம் அளித்த பின்னரே விசாரணை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வரும் புதன் கிழமையிலிருந்து விசாரணை தொடங்கும் என தெரிகிறது.
[youtube-feed feed=1]