சென்னை,

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ரிச்சர்ட் பீலே பாலாஜி, பாபு, ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்கள்.
அவர்கள் தெரிவித்ததாவது:

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆகவே, இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அராங்கமே அழைத்ததால், செய்தியாளர்களை சந்திக்கிறோம்.

ஜெயலலிதா  அப்பல்லோவுக்கு  சிகிச்சைக்கு கொண்டு வரும்போது சுய நினைவுடன்தான் இருந்தார்.  காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. உடல் பரிசோதனை யில் நோய் தொற்றால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அவருக்கு  மருத்துவ முறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது. குறிப்பாக அவரது இதயம், நுரையீரலில் நோய்தொற்று அதிகமாக இருந்தது. அதற்கான முறையான சிகிச்சை அளித்தோம்.

ரத்ததில் பாக்ட்ரீயா கலந்து பாதிப்பு மற்ற உறுப்புகளுக்கு பரவியது. இதன் காரணமாக  செப்சிஸ் உறுப்புகளை செயலிழக்க செய்தது. இதனால் பாதிப்பு அதிகமானது.

ரத்த அழுத்தம் சர்க்கரை பாதிப்பு அதிக அளவு இருந்தது.  டிரிக்கியோஸ்டோமி செய்தபின் அவருக்கு சுயநினைவு திரும்பியது.

மேலும்,  தேர்தலுக்காக அவரது  கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் சுய நினைவுடன் இருந்தார். கையில் டிரிப் ஏறியதால் கைரேகை பதிவு எடுக்கபட்டது.

தேர்தல் குறித்த ஆவணத்தை ஜெயலலிதா படித்துப் பார்த்தார். அவருடன் நாங்கள் பேசினோம். பதிலுக்கு அவர் சைகை மொழியில் பதில் அளித்தார்.

மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் குடும்பம் குறித்தும் சைகையில் விசாரித்தார்.

அவருடன் சசிகலா மட்டுமின்றி அவரது உறவினர்கள் சிலரும் பேசினர். அவரை சந்திக்க வந்த வர்கள் குறித்த விவரம் எழுதி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதித்தவர்கள் மட்டுமே அவரை பார்த்தனர்.

அவர் குணமடைய வேண்டும் என்று மருத்துவர்கள் போராடினோம்.

சிறந்த குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்து வர்கள் உடன் இருந்தனர். அவரை லண்டனுக்கு அழைத்துச் செல்வதில் சில சிக்கல்கள் இருந்தன.

தவிர வெளிநாடுகளில் அளிக்கக்கூடிய சிறந்த சிகிச்சைகள் இங்கேயே இருக்கின்றன. அவருக்கு உயர்தரமான சிகிச்சை அப்பல்லவில் அளிக்கப்பட்டது. ஆகவே வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் செல்லவில்லை.

சுயநினைவு திரும்பியவதும் ஜெயலலிதாவும் லண்டன் செல்வதை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தேறிவந்த ஜெயலலிதா வுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா அறிந்து இருந்தார்.

சுய நினைவு திரும்பியதால் தான் பிசியோ தெரபிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார்.

கண்ணாடி கதவு வழியாக ஆளுநர் பார்த்தபோது ஜெயலலிதா கையை உயர்த்தி சைகை செய்தார். சிகிச்சை முறைகள் குறித்து ஆளுநருக்கு விளக்கப்பட்டது.

பிசியோதரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு அளித்தார். மூச்சுவிட தொண்டையில் டியூப் வைக்கப்பட்டது. அவர் டிவி பார்த்தார், தயிர் சாதம் சாப்பிட்டார் என்பது உண்மையே.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளியை புகைப்படம் எடுப்பது வழக்கம் அல்ல. நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

அவருக்கு கால்கள் அகற்றப்டவில்லை. வேறு எந்த உறுப்புகளும் அகற்றப்படவில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை.

எதிர்பாராதபோது ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

நோய்த்தொற்று இதயம் வரைப் பரவியதால் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் மருத்துவர்கள் கூறினர்.

அவர் மரணமடைந்த பிறகு டிசம்பர் 5ம் தேதி இரவு எம்பாமிங் செய்யப்பட்டது

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் பாலாஜி –

தேர்தல் தொடர்பான ஆவணத்தை ஜெயலலிதா படித்து பார்த்தார். 22 ந்தேதி கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார். ஆரம்பத்தில் அவர் காய்ச்சலுக்காகதான் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார் சோதனையில் தான் மற்ற பிரச்சினைகள் தெரிய வந்தது என்று கூறினார்.

மருத்துவர் சுதா

மக்கள் அஞ்சலியின் போது உடல் கெடக்கூடாது என்பதால் அவரது உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது  என்று கூறினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

ஜெயலலிதா சாவுக்கு சசிகலாதான் காரணம் என பெரும்பாலான மக்கள் கூறிவரும் வேளையில், தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் மக்களின் மனநிலையை மாற்ற டாக்டர் பீலேவை வரவழைத்து ஆளும்கட்சி விளக்கம் கொடுத்திருப்பதாக  கூறப்படுகிறது.