சென்னை :
2016 டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார் என்று திவாகரன் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனிடையே, அவரது மரணத்தில் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இதற்கிடையே ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியைத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். இப்போது அடுத்த அதிர்ச்சியாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இன்று மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார். இதை உடனடியாக ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம்.
அதற்கு மருத்தவமனை உரிமையாளர் ரெட்டி தங்களது து மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதன் பிறகு அறிவிக்கலாம் என்று தெரிவித்தார்” என்று திவாகரன் பேசினார். இவரது பேச்சு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.