“ஒப்பாரும் மிக்காரும் இல்லை” என் அ.தி.மு.க.வினரால் புகழப்பட்டவர், அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா.

“டாக்டர் புரட்சித்தலைவி அம்மா” என்றுதான் அதிமுக தொண்டரில் இருந்து, அமைச்சர்கள் வரை அழைப்பார்கள்.

“அம்மா” உணவகம், “அம்மா” மருந்தகம் என்று தனது  நினைவாக ஜெயலலிதாவே (அரசு செலவில்) ஏற்படுத்திய திட்டங்கள் பல.

அவர் தனது போயஸ் இல்லத்தில் இருந்து கோட்டைக்குச் செல்கிறார் என்றால் சாலையின் இருபக்கத்திலும் போஸ்டர்கள் வரவேற்கும். சாலையை சற்று அடைத்தும்கூட பேனர்கள் நிற்கும். அதிமுகவினரின் அட்ராசிட்டி அப்படி.

ஆனால் அவர் உடல் நலம் குன்றியதாக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட பிறகு போஸ்டர்கள் குறைந்தன. சிலர் மட்டும், “ஏ.. ஜூரமே.. அம்மாவை விட்டுப் போ” என்று காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டினார்கள்.

டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரைப் பற்றிய போஸ்டரையே காணோம்.

அடுத்த பொதுச்செயலாளராக வந்துவிட்ட சசிகலாவை வாழ்த்தித்தான் போஸ்டர்கள் அடிக்கிறார்கள் அதிமுகவினர்.

இத்தனை சீக்கிரம் தங்கள் தங்கத் தலைவியை மறந்துவிட்டார்களே இவர்கள் என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறார்கள். அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல் நடந்திருக்கிறது.

ஆம்…

டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். ஆகவே அவர் படம் போட்டு காலெண்டர் அச்சிட கொடுத்திருந்த பலரும் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டனர்.

அப்படி செய்ய முடியாமல், போனவர்கள், தாங்கள் ஆர்டர் கொடுத்து அச்சிட்டு முடிந்து வந்த ஜெயலலிதா படம் போட்ட காலெண்டர்களை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டார்கள்.

மக்களுக்கு எழும் கேள்வி இதுதான்:

“இப்படிப்பட்டவர்கள், முன்பு ஜெயலலிதாவை என்ன நினைத்து வணங்கியிருப்பார்கள்?”