சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வசித்து வந்த அவரது போயஸ் தோட்டத்து வீடு நினைவில்லமாக மாற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இதற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தங்களது பூர்வீக சொத்து என்றும், தங்களது பாட்டி அதாவது ஜெயலலிதாவின் அம்மாவின் சொத்து என்றும் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் தெரிவித்திருந்தனர்.

அந்த சொத்து தங்களுக்கே சொந்தம் என்றும் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழக சட்டஅமைச்சர் சிவிசண்முகம், வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் இருந்த சசிகலா மற்றும்  டி.டி.வி.யின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு காவலர்களும் விலக்கப்பட்டனர். அதையடுத்து போயஸ் தோட்ட இல்லம் தமிழக போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் வெளியாட்கள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வேதா நிலையம் எனப்படும்   24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 90 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.