விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தனி ஒருவனாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதிமுக ஆட்சியில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழ கத்தை இரண்டாக பிரித்து, ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், துணைவேந்தர் நியமனம் மற்றும் அதற்கான கட்டிடங்கள், முறையான நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ரத்து செய்யும் முடிவை அறிவித்தது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போதும் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதனைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததுடன், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில், விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இநத் நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தனி ஒருவனராக விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தன்னந்தனியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலை அறிந்த அதிமுகவினர், விழுப்புரம் காந்தி சிலை அருகே திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்து அதே தனியார் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் அமர வைத்தனர்.
சி.வி.சண்முகத்தையும் விழுப்புரம் மேற்கு போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவரது ஆதரவாளர்கள் வெளியே அமரவைக்கப்பட்டுள்ளனர்.