றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், வேட்புமனு  தாக்கல் செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான வழக்கில் டாக்டர் பாலாஜி இன்று  ஐகோர்ட்டில் ஆஜராகி உள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக பேட்டியிட்ட சரவணன் தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து,  விளக்கம் தருவதாக டாக்டர் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

திமுக வேட்பாளர்  சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலராகப் பணியாற்றிய ஜீவா சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில்,  கடந்த 13ம் தேதி  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளரான வில்ஃபிரட் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, மருத்துவ சான்றிதழ்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, அதிமுக அவைத்தலைவராக இருந்த  மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே  கைரேகைப் பதிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது என வில்ஃப்ரெட் பதில் கூறினார்.

இந்நிலையில், அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை பார்க்க யாரையுமே அனுமதிக்காத நிலையில், அவரைப் பார்த்து அவரிடம் கைரேகை பெற்று அதற்கு ஒப்பிதல் அளித்த டாக்டர் பாலாஜியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் மீண்டும் ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்காக டாக்டர் பாலாஜி கோர்ட்டில் ஆஜராகி உள்ளார்.

அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்தே வழக்கின் போக்கு இருக்கும் என்றும், இதை அதிமுக, திமுக இரு கட்சியினரும் பெரும் எதிர்பார்ப்போடு கவனித்து வருகிறார்கள்.