சென்னை:
ச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே விவாதத்தில் அனல் தெறிக்கிறது.
குறிப்பாக கச்சத்தீவை மீட்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் கச்சத்தீவு விவகாரம் சட்டசபையில் ஜெயலலிதா, ஸ்டாலின் இடையே கார சார விவாதம் நடைபெற காரணமாக அமைந்தது.

மு.க. ஸ்டாலின் - ஜெயலலிதா
மு.க. ஸ்டாலின் – ஜெயலலிதா

இன்று அவையில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, “1991ல் கூறியபடி கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், “ கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார்.. மீனவர்கள் படும் துயரத்திற்கு திமுக தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகதான். கச்சத்தீவு குறித்த பேச திமுகவுக்கு அருகதை கிடையாது” என்று ஆவேசமாக கூறிய ஜெயலிலதா, “ஆனால் எனது அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஜெயலலிதாவுக்கு பதில் அளித்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், “கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு அப்போது முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.