சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று ஆஜர் ஆனார்.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ந்தேதி  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா,  75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு,  டிசம்பர் 5 ம் தேதி  அவர் இறந்ததாக கூறப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அவரது  குறித்த மர்மங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்  தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் அவரது உறவி னர்கள், சசிகலா உறவினர்கள், வீட்டு வேலையாட்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, இன்று விசாரணை ஆணையத்தில் திவாகரன் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து, டிடிவிக்கு எதிராக அம்மா அணி என்ற அமைப்பை  உருவாக்கி உள்ளார் திவாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.