சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் இன்று 2வது நாளாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது.
நேற்றைய விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, ஜெயலிலிதா டிசம்பர் 5ந்தேதிக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று அவரது கைரே கையை காட்டி விளக்கம் அளித்தார். உயிரோடு இருப்பவர்களுக்கு உள்ள கைரேகையில் உயிரோட்டம் இருக்கும் என்றும் ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியதாக கூறினார்.
அதற்கு ஆதாரமாக கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த உறுதிமொழி படிவத்தில் ஜெ. கைரேகை வைத்ததை காண்பித்து விளக்கமளித்தார். அதற்கான ஆவனங்களையும் தாக்கல் செய்தார்.
அதையடுத்து, இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். அதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஏற்கனவே, ஜெ. சிகிச்சை குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கும், அப்போல்லோ மருத்துவமனையின் அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளதை சுட்டி காட்டியிருந்தோம்.
மேலும் இதுகுறித்து மேலும் பல ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா கைரேகை குறித்து நாங்கள் ஆய்வு செய்ததில் தவறு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதை சுட்டிக்காட்டியதாகவும், அதுகுறித்து தடய அறிவியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளதாக கூறினார்.
எங்களது கோரிக்கையை விசாரணை ஆணைய தலைவர் ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதா ஆளுநருக்கு, எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையதா என ஆய்வு மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான எங்களுடைய சந்தேகங்களையும் முன்வைத்துள்ளோம். ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், என்னிடம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது, தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாக விசாரணை ஆணைய நீதிபதி கூறி உள்ளதாகவும் அவர் கூறினார்.