சென்னை:

ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 

கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்த  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, எடப்பாடி தலைமையிலான அரசு, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த,ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை கமிஷன் அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம், ஜெ.க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள்,  சசிகலா குடும்பத்தினர்,  பொதுமக்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதில் குறிப்பாக, டாக்டர்  சிவக்குமார், டாக்டர் பாலாஜி, பூங்குன்றன் , சசிகலாவின் உதவியாளர், சசிகலாவின் உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், ஜெயலலிதா வீட்டின் சமையல்காரரான ராஜம்மாளையும் விசாரணைக்கு அழைத்திருந்தது.

இந்நிலையில்,  ராஜம்மாள் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம்  ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை ஆணையம் விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விசாரணைக்கு ஆஜரான ராஜம்மாள் சசிகலா தரப்பு வழக்கறிஞருடன் ஆஜரானது, ராஜம்மாள் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பத தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது.