சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அவர் சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 9 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஉடல்நலப் பாதிப்பு காரணமாக சுமார் 75 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீர் மரணம் அடைந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் உள்ள ரகசியங்கள் இதுவரை வெளிப்படவில்லை. அனைத்தும் மர்மமாகவே தொடர்கிறது.
இதற்கிடையில், ஜெ.மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 156 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், அப்போலோ நிர்வாகம் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிட்டி கொடுத்த நிலையில், உச்சநீதி மன்றம் உத்தரவின்பேரில் ஆஜராகி வருகிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஏற்கனவே சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு விசாரணையை நிறைவு செய்தனர். இதனால் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவர்களிடம் ஏப்ரல் 5, 6, 7 ஆகிய 3 நாட்கள் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று மருத்துவர்கள் என 3 நாட்கள் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார்.
இந்த விசாரணையுடன் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்து அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.