சென்னை,
இன்று காலை சட்டசபை தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதற்கும் அஞ்சாதவர் என்று கூறினார்.
தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் இரங்கல் தீர்மானம் வாசித்தார். மேலும் மறைந்த பல தலைவர்களுக்கும் சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடந்த முறை ஜெயலலிதா அம்மையார் முதல்வராக பொறுப்பேற்றபோது பதவியேற்பு விழாவில் எங்களுக்கு 11வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதை நான் பொருட்படுத்திக் கொள்ள வில்லை ஆனால் ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்து எங்களை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாகவும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என அவர் கூறியதை நினைவு கூர்ந்தார் ஸ்டாலின்.
1989ஆம் ஆண்டு தானும் ஜெயலலிதா அவர்களும் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணிப் பொறுப்பை ஏற்றோம்.
அவர் முதல்வராக இருந்தபோது தான் எதிர்க்கட்சி தலைவராகவும், அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தான் துணை முதல்வராக இருந்து பணியாற்றியதில் பெருமிதம் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.
எதற்கும் அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளக் கூடியவர் ஜெயலலிதா என்றும், எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியை ஆளும் கட்சி அந்தஸ்து வரை உயர்த்திவர், எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் பணியாற்றியவர் என புகழாரம் சூட்டினார் ஸ்டாலின்.
காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில்,
எந்த பிரச்னையானாலும் தைரியமாக முடிவு எடுக்கக்கூடியவர் ஜெயலலிதா என்றும், விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.