முதல்வர் இலாகாக்கள் ஓபிஎஸ்க்கு மாற்றம்: அனைத்து கட்சித்தலைவர்கள் வரவேற்பு!

Must read

 
சென்னை:
முதல்வரின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றியிருப்பதற்கு தமிழக அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று உள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை நேற்று அறிவித்தது. அதில், முதலமைச்சர் இலாகாக்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  இலாக இல்லாத முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவருவதை கருத்தில் கொண்டு முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சராக ஜெயலலிதாவே தொடர்ந்து நீடிப்பார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப் 22 அன்று அப்போல்லோ மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டார். கடந்த 19 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் அரசு நிர்வாகம் சீராக நடக்க புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் அரசு ஸ்தம்பித்து உள்ளது,  செயல்படாத அரசு என்று கூறி முதல்வரை மாற்ற வேண்டும் என்றனர். ஒருசிலர் ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சி கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை விட்டனர்.
இதுகுறித்து, கடந்த ஒரு வாரமாக அரசியலில் அனல்பறந்த விவாதங்கள் நடைபெற்றன.  இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பதாக நேற்றைய கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியானது.
 
முதலமைச்சர் உடல்நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் வகித்து வந்த இலாகாக்கள் மாற்றப்பட்டு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
முதல்வரின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் , தொடர்ந்து இலாகா இல்லாத முதல் அமைச்சராக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
all-parities
இந்த முடிவுக்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும்
திருநாவுக்கரசர் – காங்கிரஸ்
இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் மாற்று முதலமைச்சர் வேண்டும், துணை முதலமைச்சர் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு . இந்த அறிவிப்பின் மூலம் நிர்வாகம் சிறப்பாக நடக்கும் என்பது எனது கருத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்
தாம் ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதோ தலையிடுவதாக செயல்பட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள் என்று தெரிவித்திருந்தேன்.
இன்று ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாக வந்த இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கவர்னருக்கு பரிந்துரைத்தது யார் என்பது பற்றி ஆராய்வதை விட நிர்வாகம் நன்றாக நடக்க எடுக்கப்பட்டுள்ள மாற்றத்தை வரவேற்பதே சிறந்தது. யார் முடிவு எடுக்கிறார்கள் என்பதில் தான் இந்த மூன்று வாரங்கள் ஓடியது .
ஆகவே இந்த மாற்றத்தை வரவேற்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முத்தரசன் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-
இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர் , நிதியமைச்சராக செயல்படுகிறார்,அவை முன்னவராக இருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.
பா.ஜ.க.  தமிழிசை:
பாஜக- இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பின் மூலம் முதல்வர் நலமாக இருக்கிறார் என்ற செய்தியையும், மத்திய அரசு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரப்போகிறது என்ற தேவையற்ற வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
த.மா.கா. ஜி.கே.வாசன்
தமாகா- நிர்வாகம் சிறப்பாக நடக்கும் என்பதால் இந்த முடிவை வரவேற்கிறேன்.மக்களின் எதிர்ப்பார்ப்பு படி இந்த முடிவு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
 
 

More articles

Latest article