சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்கிறார்.
மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, விசார ணை ஆணையம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உள்பட பல்வேறு நிகழ்வுகள் மற்றும், ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 158 பேரிடம் விசாரணை நடத்தியது.
இடையில் வழக்கு மற்றும் பல்வேறு நிகழ்வுகள் காரணமாக விசாரணை தடைபட்ட நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக 14முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது, ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்து வருவதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பிக்கிறார். சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை அவர் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.