வரலாறு முக்கியம் அமைச்சரே…:
 

 
தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய தருணங்கள் இந்த பகுதியில் மீண்டும் உங்கள் பார்வைக்காக. ஏப்ரல் 1987ம் வருடம் சட்டசபையில் நடந்த மோதல், ஜெயலலிதாவை அகில இந்திய அளவில் கொண்டுபோய் சேர்த்தது என்றால் மிகையில்லை. அதே நேரம், சட்டசபையின் மாண்பும், தமிழகத்தின் பண்பும் படுபாதாளத்துக்கு போவதற்கு காரணமாகவும் அமைந்தது.  அந்த தருணத்தை நிமிடத்துக்கு நிமிடம் படம் பிடித்துக்காட்டியிருக்கிறது அப்போது வெளியான தராசு வார இதழ். (07.04.89)
“சட்டசபை கலவரம்: ஜெயலலிதாவைத் “தீர்த்துக்கட்ட” கூட்டுச் சதி!” என்ற தலைப்பிலான அந்த கட்டுரை  உங்கள்  பார்வைக்காக…
 
ஒரு முன்னோட்டம்.
ஜெயலலிதா உதவியாளர் நடராஜன், மார்ச் 18ஆம் தேதி கைது.  திருநாவுக்கரசு உட்பட பலரும் விரைவில் கைது ஆகலாம் என்று செனனை நகர  போலீஸ் கமிசனர் துரை 19ம் தேதி செய்தி வாசித்தார்.
20ம் தேதி – ஜெயலலிதா கூட கைது ஆகலாம் என்று அவர் மேலும் கூறினார்.
டெல்லியில் 21ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மூப்பனார் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டு என்று ரகசிய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு இசைவாக நடந்துகொள்ளும்படி பிரதமர் ராஜீவ்காந்தி மூப்பனாருக்கு உத்தரவிட்டார்.
உடனே 22ம் தேதி, மூப்பனார் டெல்லியிலிருந்து கேட்டுக்கொண்டபடி  ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ்  சட்டமன்ற கொறடா எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரும் கடுமையான அறிக்கையை சென்னையில் அவசர அவசரமாக வெளியிட்டார்.
மார்ச் 22ம் தேதி இரவு, டெல்லியிலிருந்து வந்த மூப்பனார் 23ம் தேதி காலை பத்திரிகையாளர்களை சந்தித்து “வெண்டைக்காய்”த்தனமாக ஜெயலலிதா ஆதரவு பேட்டி ஒன்றைத் தந்தார். புதிய உறவுக்கு அவர் சங்கடப்படுகிறார் போலத் தெரிந்தது.
மறுநாள் 24ம் தேதி ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கண்டன பேரணி மெய்யாகவே எழுச்சியுடன் நடந்தது. கூட்டத்தில் சென்றவர்கள் கமிசனர் துரையையும், கருணாநிதியையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்கள்.
ஜெயலலிதாவும் கைது செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில்,  பிரச்சினையைத் திசை திருப்பி குழப்பத்திலாழ்த்த வேண்டுமென நினைத்தார் ஜெயலலிதா. பிரதமர் ராஜீவ்காந்தி அ.தி.மு.கவுடன், கூட்டு வைத்து நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்திருந்தது அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருந்தது.
அ.தி.மு.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 23ம் தேதி இரவும் 24ம் தேதி  இரவும் கூட்டப்பட்டனர். 25ம் தேதி சட்டசபையை நடக்கவிடக்கூடாது என்று, கே.கே. எஸ்.எஸ். ஆரும் திருநாவுக்கரசும் பொறுப்பேற்று ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினர்.
இந்த இரண்டு கூட்டத்திலும் வட சென்னை மதுசூதனன், தென் சென்னை ஏ.வி. கிருஸ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
கறுப்பு நாளன்று கண்டது!
மார்ச் 25ம் தேதி காலை 9 மணிக்கே – கிட்டதட்ட 500 அ.தி.மு.க. தொ(கு)ண்டர்கள் கோட்டை வளாகத்தில் திட்டுத் திட்டாய்க் காணப்பட்டனர்.
தி.மு.கவினரும் இருநூறு பேர் 11 மாடிக்கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் தயார் நிலையில் இருந்தனர்.
ஏ.வி. கிருஸ்ணமூர்த்தி – மதுசூதனன் தலைமையில் நான்கு வேன்களிலும் இரண்டு கார்களிலும் நாலு ஆட்டோக்களிலும் மேலும் பல தொ(கு)ண்டர்களுடன் சரியாக 10 மணிக்கு கோட்டை வளாகத்தில் வந்திறங்கினர்.
அவர்களெல்லாம் “ஜெ.”வை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் என்று காவலர்கள நினைத்துவிட்டனர்.
மாநில சி.ஐ.டி. காவலர்கள்  வயர்லெஸ் உதவியுடன் காலை 9.30 மணி முதலே சுற்றிச் சுற்றி வந்தனர்.
ஏழெட்டுக் கார்கள் புடைசூழ, கான்டெசா காரில் தங்க ஜரிகை பார்டர் போட்ட கறுப்பு நிற சில்க் புடவை கட்டி, லேசாக புன்னகைத்தபடி வந்திறங்கினார் ஜெயலலிதா. அப்போது மணி 10.50. உடனே அவர் நேராக அவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தார். அவரது கட்சி எம். எல்.ஏக்களில் ஒருவரைத் தவிர – எல்லோரும் ஆப்சென்ட் ஆகாமல் முன்கூட்டியே வந்து அமர்ந்திருந்தனர்.
காலை 11 மணி..
சபாநாயகர் தமிழ்க்குடிமகன் தனது இருக்கைக்கு வந்தார். சபை அமைதியாக இருந்தது.  வழக்கம்போல குறள் ஒன்றை வாசித்தார், அவர். உடனே சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து “ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரத்தில் சென்னை நகர போலீஸ் கமிசனர் துரை, சபையின் உரிமையை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதல் பேரில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, முதல்வர் கருணாநிதி மீது உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா எழுந்து, “முதல்வர் மீதும், போலீஸ் கமிசனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொடுத்துள்ளேன். எனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. முதல்வரும் அவரது அமைச்சரவையும், பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்புத் தீர்மானத்தையும் கொண்டு வருகிறேன்” என்று பேசினார்.
உடனே பி.எச். பாண்டியன் எழுந்தார்.
கலவரம் நடக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்திருந்த பாண்டியன், “வேட்டி உருவல் – ஜட்டி நழுவல்” நடந்துவிடக்கூடாது என திட்டமிட்டு, வழக்கத்துக்கு மாறாக சபாரி உடையில் வந்திருந்தார்.
அவர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கியும், தி.மு.கவுக்கு ஆதரவாகவும் வாதத்தை அடுக்கி, ஆளும் கட்சியைச் சில்லிடவைத்து, ஜெயலலிதா தரப்பினரை படு சூடாக்கினார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சபாநாயகர், பாண்டியனை உட்காரவைத்தார். சட்டசபையின் மொத்த குழப்பத்திற்கும் இதுவே துவக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள உரிமைப்பிரச்சினை குறித்து அலசி ஆராய்ந்து திங்கட்கிழமை கூறுவதாகவும், முதல்வர் பட்ஜெட் உரையை வாசிக்கலாம் என்றும் கூறினார் சபாநாயகர்.  முதல்வர் கருணாநிதி, “பட்ஜெட்” உரையை வாசிக்கத்துவங்கினார்.
உடனே ஜெயலலிதா எழுந்து ஏற்கெனவே எழுதி வைத்திருந்த ஒரு அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். “முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னவுடன், கருணாநிதி “மைக்”கைத் தனது கையால் மூடிக்கொண்டு ஏதோ சத்தமாககூறினார்.
ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார்.
அதற்குள் கோபி அ.தி.மு.க. உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன், முதலமைச்சர் கையில் இருந்த பட்ஜெட் உரை காகிதத்தை தாவிச்சென்று பறித்து கிழித்து எறிந்தார்.
அந்த அமளியில் முதல்வரின மூக்குக்கண்ணாடி உடைந்தது. தி.மு.க. அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன். முத்துராமலிங்கம்,  கோசி.மணி, கண்ணப்பன் மற்றும் தி.மு.க. எம். எல்.ஏக்கள் – அ.தி.மு.கவினர் பக்கம் ஆக்ரோசமாக வேட்டியை மடிததுக்கட்டி முஷ்டியை உயர்த்தினார்கள்.
பார்வையாளர்கள் மாடத்திலிருந்து முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள், முரசொலி மாறன், மாறனின் துணைவியார் ஆகியோர் சபையின் பரபரப்பான நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
துணை சபாநாயகர் பி.துரைசாமி, எங்கிருந்தோ பறந்து வந்து தாக்கும் டார்ஜானைப்போல் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை நோக்கி குத்துக்களையும் உதைகளையும் பறிமாறி “களப்பணி”யைத் துவக்கினார்.
எல்லா அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆத்திரம் மேலிட பட்ஜெட் பேப்பர்களை சர்சர் என்று கிழித்தது எறிந்தனர்.
அமைச்சர் பெருமக்கள் இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவை குறி வைத்தனர். கனமான அட்டைகளையும் கட்டைகளையும் மைக் ஸ்டாண்டுகளையும் எடுத்து ஜெயலலிதாவின தலையை நோக்கி எறிந்தனர்.

துரை முருகன்
துரை முருகன்

ஒரு பக்கம் எம். எல்.ஏ. அண்ணாநம்பியை கீழே தள்ளி மிதித்தது ஒரு தி.மு.க. கூட்டம். அவருக்கு உடம்பெல்லாம் ரத்தகாயம். காது கிழிந்து தொங்கியது!
பார்வையாளர்கள் காலரியிலிருந்து சரமாரியாக செருப்புகள் வீசப்பட்டன!
போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன், ஜெயலலிதாவின் புஜத்திலேயே ஓங்கி ஒரு குத்துவிட்டார். ஜெயலலிதா நிலைதடுமாறி, தனது இருக்கையில் விழுந்தார். அவர் வயிற்றில் மீண்டும் ஒரு குத்து விழுந்தது.
துரைமுருகன் – துச்சாதனனாகி ஜெயலலிதாவின் புடவையை உருவினார். ஜெயலலிதா போராடி புடவையை மீட்டார். புடவையின் ஒரு பகுதி கிழிந்து தொங்கியது – கூடவே தமிழ்ப்பண்பாடும், கலாச்சாரமும் சேர்ந்தே.
சட்டமன்ற காவலர்களின் உதவியை நாடி – அமைதிப்படுத்த – சபாநாயகர் தமிழ்க்குடிமகன் முயற்சிக்கவில்லை.
கே.கே.எஸ்.எஸ்.ஆர் – திருநாவுக்கரசு வகையறாக்கள் ஜெயலலிதாவை சூழ்ந்து பாதுகாத்தனர்.
இன்னொரு பக்கம் – மூப்பனாருக்கு அர்ச்சனைகள் நடந்தன. ஆனால் அவை எதுவுமே அவரைக் குறிவைத்து நடந்ததல்ல. தற்செயல்தான்.
இளைய தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உணர்ச்சிவசப்பட்டதை சில மூத்த தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தடுத்தனர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முசிறி தங்கவேலு வேட்டியை, தி.மு.கவினர் உருவி நிர்வாணமாக்க முயற்சித்தனர். ஜட்டியுடன் வராண்டாவுக்கு ஓடி வந்தார் அவர்.
தி.மு.கவினர் மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவைத் தாக்க முயற்சிக்க.. அ..தி.மு.கவினர் பாதுகாக்க.. ஒரு வழியாய், ரத்த காயங்களுடன் – கண்ணீர் சிந்தியபடி ஜெயலலிதா மன்றத்தைவிட்டு – ராமச்சந்திரன், திருநாவுக்கரசு துணையோடு வெளியேறினார்.
ஜெயலலிதாவைத் தீர்த்துக்கட்ட ஒரு சதித் திட்டத்தை வகுத்து வைத்துக்கொண்டு செயல்பட்டது போலவே இருந்தது. ஜெயலலிதா தலையை குறி பார்த்து தாக்குதல்கள் விழுந்தன.
சபையிலிருந்து சகாக்களுடன் வெளியேறிய ஜெயலலிதா – ஏழெட்டு கார்களில் ஏறி – நேராக ஆளுநர் மாளிகைக்குச் சென்று முறையிட்டார். போயஸ் தோட்டத்திற்கு வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நாத்தழுதழுத்தபடி பேசினார். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டார்.
துரைமுருகன், சேலையைப் பிடித்து இழுத்து கிழித்ததாகவும், அப்போது கீழே விழுந்ததால் முட்டிகளில் பலத்த அடி பட்டதாகவும், முதலமைச்சர் கருணாநிதி ஆபாசமாக “தே.. ” என்று சொல்லித் திட்டியதாகவும் தலையைக் குறிபார்த்து சரமாரியாகத் தாக்கப்பட்டதாகவும், சட்டசபைக்காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததாகவும், ஒரு பெண்ணுக்கே – அதுவும் சட்டசபையிலேயே இந்த மாதிரி அவமானம் நிகழ்ந்தால் நாட்டிலே மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது என்றும் அவர் கேட்டார்.
சபை, ஒருவழியாக பகல் 1.30 மணிக்கு முடிந்ததும், முதல்வர் கருணாநிதி, மருமகன் முரசொலி மாறனுடன் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்கச் சென்றார். அமைச்சர்கள் கண்ணப்பன், பொன்முடி, சுப்புலட்சுமி, நேரு, தங்கவேல், சந்திரசேகரன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர்.
நாம் வீரபாண்டி ஆறுமுகத்தைச் சந்தித்தோம்.
தராசு: உங்களைத் தாக்கியது யார், எப்படி?
வீ.ஆ:  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஒரு கனமான பொருளை எடுத்து தலைவர் கலைஞர் தலையைக் குறி பார்த்து வீசினார். நான் குறுக்கே விழுந்து தடுத்தேன். என் மண்டையில் பலமாக அடி விழுந்துவிட்டது.
அடி விழுந்தது அவர் தலையில் மட்டுமல்ல.. தமிழக மக்களின்தலைகளிலும் சேர்த்துதான்..!
(நன்றி: தராசு வார இதழ்)