சென்னை: இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்று கிருஷ்ணகிரியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

ஜெயகோபாலின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து தேடிவருவதாக அரசின் சார்பில் சமாளிப்பு சொல்லப்பட்டு வந்தாலும், அவர் பிடிபடாமலேயே இருந்து வந்தார்.

ஆளுங்கட்சி என்பதால் வேண்டுமென்றே அவரை காவல்துறையினர் நெருங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. ஜெயகோபாலை பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்தப் படைகளின் கையில் ஜெயகோபால் சிக்கியதாக தெரியவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. ஜெயகோபால் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? என்று கேள்விகேட்ட நீதிமன்றம், அரசுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.

இதனையடுத்து, பேனரை அகற்றாக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயகோபால் வீட்டில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் அவர் ஒகேனக்கல் பகுதியில் ஒளிந்திருக்கிறார் என்று தகவல் வரவே அப்பகுதியிலுள்ள ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் ஆள் சிக்கவில்லை. ஆனால், எதிர்பாராத வகையில் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் சிக்கினார். அஞ்கு வைத்து அவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர்.

ஒரு குற்றவாளியைக் கைதுசெய்ய அரசு இத்தனை அலட்சியம் காட்டுவதா? என்று கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.