ஜப்பான் நாட்டை தாக்கியுள்ள அதிபயங்கர புயலால் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது ஹகிபிஸ் புயல். சுமார் 216 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றால், வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததோடு, மின் கம்பங்களும் கடும் சேதத்திற்கு ஆளாகியுள்ளன. இதனால் நகரத்தில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் அபாயம் ஏற்படும் என்று ஏற்கனவே சுமார் 75 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களை வேறு பகுதிகளுக்கு செல்லும் படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருந்தது. அரசின் இந்த எச்சரிக்கைகளை தொடர்ந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் தாக்கி ஓய்ந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நகரமெங்கும் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்திருக்க கூடும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை டோக்கியோ நகரை தாக்கிய புயல், சிறிது நேரத்திற்கு பிறகு இஷு பகுதியை நோக்கி நகர்ந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.