டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்நாட்டில் உள்ள பிறப்பு விகிதம் பற்றிய புள்ளி விவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த புள்ளி விவரங்களில் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது.
2019ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 864,000 ஆகும். 1899ம் ஆண்டுக்கு இது தான் தற்போது குறைந்த பிறப்பு விகிதமாகும். 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் 54,000 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளன.
ஜப்பான் நாட்டில் நீண்ட ஆயுளுடன் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகம். நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 60 வயதை கடந்து வாழ்கின்றனர். 2018ம் ஆண்டு மக்கள் தொகை 124 மில்லியன்.
இப்போது இருக்கும் நிலை தொடருமானால் 2065ம் ஆண்டு மக்கள் தொகை 88 மில்லியனாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் மட்டும் பிறப்பு விகிதம் குறைந்து காணப்படவில்லை.
அண்டை நாடுகளாக தென் கொரியாவிலும் இதே பிரச்னை நிலவி வருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, வாரத்துக்கு 68 மணி நேரம் என்ற வேலை நேரத்தை 52 மணி நேரமாக குறைத்திருக்கிறது.