காதலரை மணமுடிக்க பட்டத்தை துறந்து இழப்பீட்டையும் மறுத்த ஜப்பான் இளவரசி

Must read

டோக்கியோ

ப்பான் இளவரசி தனது அரச பட்டம் மற்றும் 1.3 மில்லியன் டாலர் இழப்பீடு ஆகியவற்றைத் துறந்து காதலரை  மணம் புரிந்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும் இளவரசியுமான மகோ கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதல் வயப்பட்டார்.   கடந்த  2017-ம் ஆண்டில் இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.

ஜப்பான் ஊடகங்களில் இது பெரும் பேசுபொருளானது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞரை ஜப்பான் இளவரசி மணப்பதை அந்த நாட்டின் பழமை வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் அரச குடும்பத்திலும் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இளவரசி மகோவின் தந்தை புமிகிடோ இதனை மறுத்தார். சாமானிய நபரை ஜப்பான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தைத் துறக்க வேண்டும் என்பது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய வழக்கமாகும். இதை மனதார ஏற்ற இளவரசி மகோ. காதலரை கரம் பிடிக்க, தன்னுடைய அரச பட்டத்தைத் துறக்க தயார் என்றார்.

அத்துடன் ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) பணத்தையும் பெற மகோ மறுத்துவிட்டார்.   கடந்த 2018 ஆம் ஆண்டு இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் நடக்க இருந்தது.

கீ கோமுரோவின் குடும்பம் சில நிதி சார் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் திருமணம் தள்ளி போனது. பிறகு கீ கோமுரோ தனது சட்டப்படிப்பைத் தொடருவதற்காக அமெரிக்காவுக்கு சென்று 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம்தான் அவர் ஜப்பான் திரும்பினார்.

இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி ஜப்பானிய அரச குடும்பத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி மிகவும் எளிமையான முறையில் நேற்று இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் நடந்துள்ளது.

More articles

Latest article