டோக்யோ

ப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 38 வருடங்களாக குறைந்து வருகிறது.

உலகெங்கும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.    ஆனால் ஜப்பான் நாட்டில் வேலைக்கு ஆள் இல்லா திண்டாட்டம் உள்ளது.  இதை ஒட்டி கடந்த மாதம் முதல் ஜப்பான் அரசு வெளிநாட்டினரை அனைத்து துறைகளிலும் பணிக்கு அமர்த்த அனுமதி வழங்க தொடங்கி உள்ளது.   அத்துடன் முதியோர் தொகை ஜப்பானில் அதிகரித்து வருகிறது.

இது குறித்து ஆராய்கையில் கடந்த 38 வருடங்களாக ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.     ஜப்பான் நாட்டில் மே 5 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.   அதை ஒட்டி ஜப்பான் அரசு நேற்று குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறித்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி அன்றைய கணக்கெடுப்பின்படி 1.533 கோடி குழந்தைகள் (15 வயதுக்கு உட்பட்டோர்) உள்ளனர்.   இது சென்ற ஆண்டை விட 1,80,000 குறைவாகும்.   கடந்த 1950 ஆம் வருடத்தில் இருந்து நடந்த கணக்கெடுப்பில் இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும்.   தற்போது ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 12.1% குழந்தைகள் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலக நாடுகளில் 4 கோடி மக்கள் உள்ள நாடுகளில் மிகவும் குறைவானதாகும்.    தென் கொரியாவில் 12.9%  இத்தாலி  மற்றும் ஜெர்மனியில் 13.4% குழந்தைகள் உள்ளனர்.   கடந்த வருடம் ஒரு ஜப்பானியப் பெண் தனது வாழ்நாளில் குழந்தை பெறும் சராசரி ஆனது 1.43  ஆக உள்ளது.    இதற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இந்த சராசரி 1.8 ஆக உள்ளது.