“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியவர் ஏ.ஆர்.ரகுமான். இன்று அவரது பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பத்திரிகை டாட் காம் இணையதளமும் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்து, உலக மக்களிடையே தமிழர்களை தலைநிமிரச் செய்தவர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார். இவர் இளம்வயதிலேயே மரணத்தை தழுவியதால், குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார்.
பின்னர் குடும்ப வறுமையை போக்குவது தொடர்பாக ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக, அவர் இஸ்லாம் மதத்துக்கு மாரியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.
தனது 11 வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்டு உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். சுமார் 500 படங்களுக்கும் மேல் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார்.
இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார்.
1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது. முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது.
ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்?’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர்சர்வதேச எல்லைகளிலும் தடம் பதிக்கத் துவங்கினார் ரஹ்மான்.
இதனிடையே அவர் வெளியிட்ட வந்தே மாதரம் என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது. மேலும், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகம் என இசைத் துறையின் அத்தனை தடங்களிலும் தனது திறமைகளை அழுத்தமாக பதிவு செய்தார் ரஹ்மான்.
ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது.
இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.
ரஹ்மானின் இசைக்காகவே திரையரங்குகளில் ஓடிய படங்களின் ஏராளமானவை. பாடல்கள், பின்னணி இசை என, மேடை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பல புதுமைகள் பிரமாண்டங்களை கொடுத்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த ரஹ்மான், சன் சைன் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் பெற்றுள்ள விருதுகள்:
இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.
இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
பத்மஸ்ரீ விருது
லாரன்ஸ் ஆலிவர் விருது
தமிழக திரைப்பட விருது
மலேசிய விருது
ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.
கோல்டன் குளோப் விருது
கிராமிய விருது
ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.
இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமானுக்கு உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை உள்ளனர்.
இன்று அவரது பிறந்தநாள். உலக ரசிகர்களோடு பத்திரிகை டாட் காம் இணையதளமும் வாழ்த்துகிறது.