காவிரிக்காக பதவியை உதரிய வாழப்பாடியாரின் பிறந்தநாள் (1940)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை   மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த பிரபலமான அரசியல் தலைவர்.
1940ல் இதே நாளில்  சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார் ராமமூர்த்தி. தனது பத்தொன்பதாவது வயதிலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1959ல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டு அங்கிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். பிறகு  காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991-92ம் ஆண்டு பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான  மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.  1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார்.
1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999 பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார் ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். 2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
1991 – 92 காலகட்டத்தில் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில்  மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக இருந்த, வாழப்பாடியார், காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தனது பதவியை உதறித்தள்ளினார்.
அரசியல் என்பதே பதவிக்காக என்று மாறிவிட்ட நிலையில், பொதுப் பிரச்சினைக்காக தனது பதவியை உதறிய இவரது செயல் இன்றும் வியப்படன் பார்க்கப்படுகிறது. இன்றளவும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது.

 
அமைதித்தூதர் எ ரிக் சொல்ஹெய்ம் பிறந்தநாள் (1955)
கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகளில் சிறப்பு தூதராக பல காலம் பணியாற்றியவர். நார்வே அரசில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றியவர்.
அந்  நாட்டின் இடது சோசலிஷ கட்சியின் தலைவரும்கூட.
download (3)
 
மக்கள் போராளி ஜீவா  நினைவு நாள் (1963)
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர்  ப.ஜீவானந்தத்தின் நினைவு நாள் இன்று.
தனது வாழ்நாளில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.  தனிப்பட்ட வழக்குகளுக்காக இல்லை.. பொது காரியங்களுக்காக போராடி சிறை வாழ்க்கை எய்தியவர்.  காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். .
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார்.  குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி,தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
 
 
download (1)
என். டி. ராமராவ்  நினைவு நாள் (1996)
என். டி. ஆர் என்று ஆந்திர மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.டி. ராமராவ்,  தெலுங்கு திரைப்பட நடிகராக அறிமுகமாகி அரசியலிலும் முக்கிய இடம் பிடித்தவர்.  தெலுங்கு தேசம் கட்சியைத்தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார். தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது. அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார். ஆனால் இன்றளவும் என்.டி.ஆர். பெயருக்கு ஆந்திர மக்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.