சென்னை: அருவடை திருநாளான தைப்பொங்கல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பொங்கல் வைக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குளும் பொங்கல் வைக்கலாம், அப்போது வைக்க முடியாதவர்கள், நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய தினம் பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன் குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு பெரியோரின் ஆசிகளைப் பெற வேண்டும்.
பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த்தம். அதாவது, ‘மகிழ்ச்சி பொங்குதல்’, ‘பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு. பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான சிறப்புமிக்க பண்டிகையாகும். சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். இது உழைப்பின் மகிமை, குடும்ப உறவுகளின் பேராற்றல் ஆகியவற்றை விளக்கும் ஒரு பண்டிகையாகும்.
தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் விளங்குகிறது. இது விவசாயம், கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.
தைப்பொங்கல் என அறியப்படும் இந்தப் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் நமக்குள் மகிழ்ச்சிப் பொங்கிப் பெருக வழிசெய்யும் அற்புத நாளாகத் திகழ்கிறது பொங்கல் பண்டிகை. இது, நம்மை வாழவைக்கும் இறைவனுக்கும் இயற்கைக் கும் நன்றிகூறி வழிபடும் திருநாளும் கூட.
புராணங்கள் தை முதல் நாளை மகரசங்கராந்தி எனப் போற்று கின்றன. சூரியன் – இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத் தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவ ராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரை வழிபடும் நாள் தைப்பொங்கல் திருநாள்.
ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதில், உத்தராயணப் புண்ணிய காலம் தொடங்குவது, தை மாதப் பிறப்பு அன்றுதான் (14.1.25 செவ்வாய்). இந்தத் தினத்தில் சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வார்.
தைப்பொங்கல் திருநாள் – இந்த வருடம் 14.1.25 செவ்வாய்க் கிழமை அன்று காலை 7:30 முதல் 8:30 மணி வரை அல்லது காலை 10:30 முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாகும். இயலாதவர்கள் நண்பகல் 12 முதல் 1 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்!
ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது பணியைத் தொடங்கும்போது, அவரை வாழ்த்தி வரவேற்பதாகவே, தமிழ் மாதத்தின் முதல் நாளில் சூரிய வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. இதனை மாத சங்கராந்தி அல்லது மாதப் பிரவேசம் என அழைப்பர். தை மாதத்தை மகர மாதம் என்பர். ஆகவே, இந்த நாளின் முதல் நாள் மகரசங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சூரியனுக்கும் உலாத்திருமேனியாக விளங்கும் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகர மூர்த்திக்கும் அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.