சென்னை: தமிழ்நாட்டில், உதிய உயர்வு ஒப்பந்தம் வலியுறுத்தி ஜனவரி 10ந்தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஊழியர்கள் நூதன முறையில் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைடுத்து வரும் 10ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். ஆனால், ஆனால், ஒப்பந்த காலம் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன் காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.
இதையடுத்து ஊதிய ஒப்பந்தம் குறித்தும், காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வலியுறுத்தியும், மின்வாரிய ஊழியர்கள் தமிழகஅரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், மாநில அரசு கண்டுகொள்ளாத நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்து உள்ளனர்.
அதன்படி, ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.