கோவை; ஆன்லைன் சூதாட்டத்தால் கோவையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்தால் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 37வது நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் தடை மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ரவி அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறார்.  இதற்கிடையில் தமிழகஅரசு கொண்டு வந்த அவசர சட்டமும்,  காலாவதியாகி விட்டது. இதனால்,  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரம். ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல்,  சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆன்லைன்  சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மென்பொருள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் உப்பிலி பாளையத்தில் விடுதியில் தங்கியிருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கரின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். சங்கரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சங்கர் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஒரு வருடத்தில்  36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 37வது நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதுபோல  ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய  நாட்களில் நிகழ்ந்த 5வது தற்கொலை இது என்பத குறிப்பிடத்தக்கது.