ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் 4 பெண்கள் உள்பட 244 பேர் போட்டியிடுகின்றனர். பிரிவினைவாதி பர்காதி உள்ளிட்ட 35 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த 279 வேட்பு மனுக்களில் 244 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. சிறையில் இருக்கும் பிரிவினைவாதி பர்காதி உள்ளிட்ட 35 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாக மொத்தம் 4 பெண்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர்.

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு  செப்டம்பர் 18 ந்தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர்  25ந்தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு  அக்டோபர் 1ந்தேதியும் நடைபெற உள்ளது.   வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 4 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில்,   காங்கிரஸ் கட்சி, அங்குள்ள பரூக் அப்துல்லா தலைமையிலான  தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதற்கிடையில், முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 24  தொகுதிகளில்   வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள்  ஆக.28 உடன் முடிவடைந்தது. இதையடுத்து,  இன்று  (ஆகஸ்டு 30) வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.  முன்னதாக நேற்று வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் விவரம் வெளியிடப்பட்டது.

முதல் கட்ட சட்டசபை தேர்தல் 24 தொகுதிகளில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற உள்ளது.  இந்த 24 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 279 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் சிறையில் உள்ள பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சர்ஜன் அகமது பர்காதியின் வேட்பு மனு 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

 ஜம்முவின் தோடா பிராந்தியத்தில் உள்ள 8 மற்றும் காஷ்மீரின் 16 தொகுதிகளுக்கான அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் மொத்தம் 244 ஏற்கப்பட்டிருக்கின்றன.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று  கடைசி நாள். இதனையடுத்து இன்று மாலை  முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

முதல் கட்ட தேர்தலில் பாஜக, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக மொத்தம் 65 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 4 பேர்தான் பெண்கள். அதாவது முதல் கட்ட தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் 6% மட்டுமே பெண்கள்.

தேசிய மாநாட்டுக் கட்சி மொத்தம் 18 பேரை வேட்பாளர்களாக அறிவித்தது. இவர்களில் 2 பேர் பெண்கள்.

மெகபூபா முப்தி என்ற பெண்ணை தலைவராகக் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு பெண் வேட்பாளராக அவரது மகள்  இல்திஜாதான் களமிறக்கி உள்ளார்.

 பாஜகவின் 16 வேட்பாளர்களில் ஒரே ஒருவர் பெண்.

காங்கிரஸ் கட்சி  சார்பில் எந்தவொரு பெண் வேட்பாளரும் களமிறங்கவில்லை.

குலாம் நபி ஆசாத் கட்சி 11 வேட்பாளர்களையும் அப்னி கட்சி 13 வேட்பாளர்களையும் முதல் கட்ட தேர்தலில் நிறுத்தி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் 26 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்முவில் 11 தொகுதிகளிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில்15 தொகுதிகளிலும் 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 2-ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு செப்டம்பர் 25-ந் தேதி நடைபெறும்.