டில்லி,
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை காரணமாக சசிகலா சட்டமன்ற குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, ஓபிஎஸ்-சிடம் இருந்து வலுக்கட்டாயமாக முதல்வர் பதவி பிடுங்கப்பட்டது.
அதையடுத்து, சசிகலா முதல்வராக பதவி ஏற்க அழைக்க கோரி, கவர்னரை சந்தித்து கோரினார். இதற்கிடையில், சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் வெளியேறினார்.. அவருக்கு ஆதரவாக முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் உள்ளனர்.
இதன் காரணமாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சசிகலா தரப்பினர் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான மது, மாது சப்ளை செய்யப்பட்டு, அவர்களது செல்போனும் ஜாமர் கருவியின் உதவியால் செயல் இழக்க வைக்கப்பட்டது. மேலும், அந்த பகுதிக்குள் யாரும் செல்லாதவாறு சசிகலா தரப்பினரின் அராஜகம் கொடிகட்டி பறந்தது.
இதுகுறித்து, ஓபிஎஸ் அணியினர் கவர்னர், மத்தியஅரசு, ஜனாதிபதி போன்றோருக்கு மனு கொடுத்தனர். கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களின் செல்போன்களை செயல் இழக்க பயன்படுத்தப்பட்ட ஜாமர் கருவி குறித்து விசாரிக்க கோரி கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டது.
கவர்னர் அந்த புகார் மனுவை, மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், மத்திய உள்துறை விசாரணையில் இறங்கி உள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க கோரி, தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக கோட்டை வட்டாரம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது என்றும் ஆட்சியார்களும், அதிகாரிகளும் தடுமாறி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து தலைமைசெயலக வட்டாரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் யாதெனில்,
மறைந்த ஜெயலலிதாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததால், அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு சார்பிலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புக்காக பலகோடி ரூபாய் அரசு செலவு செய்திருந்தது.
மேலும், ஜெயலலிதாவுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டது. அவர் எங்கு சென்றாலும், அந்த ஏரியாவில் உள்ள செல்போன் டவர்களை செயல் இழக்கச் செய்யும் வகையிலலும், செல்போன்கள் வேலை செய்வதை தற்காலிகமாக நிறுத்தும் வகையில், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாமர் கருவி பொருத்தப்பட்ட கார் தமிழக போலீஸ் தரப்பில் வாங்கி உபயோகப்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா எங்கு செல்கிறாரோ, அங்கு முன் கூட்டியே இந்த கார் சென்று விடும். அவரது நிகழ்ச்சிக்கு தகுந்த வாறு அந்த ஜாமர் கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில்,ஜெ மறைவை தொடர்ந்து சசி முதல்வராக பதவி ஏற்க துடித்த வேளையில், கவர்னர் தாமதம் செய்ததன் காரணமாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ‘அன்புச்சிறை’யில் அடைத்தனர். கூவத்தூர் பங்களாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டு 10நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டனர்.
அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணி தாவுவதை தடுப்பதற்காக அவர்கள் பயன் படுத்தி வந்த செல்போன்கள் செயலிழப்பு செய்யப்பட்டன. இதற்காக தமிழக அரசுக்கு சொந்தமான, ஜெவுக்காக பயன்படுத்தி வந்த அரசு ஜாமர் வாகனம் செக்யூரிட்டி போலீஸ் பிரிவு அதிகாரிகள் துணையோடு, கூவத்தூரில் உள்ள ரிசார்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு செல்போன் சிக்னல்களை தடை செய்யப்பட்டது.
இந்த பணியை விடுப்பில் சென்ற உளவுத்துறை அதிகாரியின் ஏற்பாட்டில் கூவத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஓபிஎஸ் அணியினர், அரசுக்கு சொந்தமான ஜாமர் கருவியை, எப்படி ஒரு தனிநபருக்கு ஆதரவாக கூவத்தூருக்கு கொண்டு செல்லலாம்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
அரசு சட்டப்படி தனியார்கள் ஜாமர் கருவி உபயோகப்படுத்த முடியாது. இந்நிலையில், அரசு கருவியை தனியாருக்காக உபயோகப்படுத்தியது ஏன் என்றும், கூவத்தூர் எடுத்து சென்றது ஏன் என்றும் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை, தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல்துறை டி.ஜி.பி., ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதற்கு பதில் சொல்ல முடியாமலும், எப்படி பதில் அனுப்புவது என்றும் குறித்து உயர்அதிகாரிகள் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.
இதில் உண்மை தெரியவந்தால், இந்த சதிச்செயலில் ஈடுபட்ட போலீஸ் மற்றும் தலைமை செயலக உயர் அதிகாரிகள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
இந்த பிரச்சினை குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவல் ஏன் அந்த கருவியை கூவத்தூருக்கு கொண்டு வந்தீர்கள் என எதிர் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தலைமை செயலக அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் செய்வதறியா மல் திகைத்து நிற்பதாகவும், அவர்களுக்கிடையே நீதான் சொன்னாய், அவர்தான் சொன்னார் என்றும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதன் காரணமாக உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் பெரும் புயல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மத்திய உளவுதுறை போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தலைமைசெயலக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன….