டில்லி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கடும் போராட்டம் நடைபெறுவதால் விடுதிகள் மூடப்பட்டுள்ளன

நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.   வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது.    டில்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப்  பல்கலைக்கழக மாணவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இந்த போராட்டத்தை அடக்க காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்ததில்  போராட்டம் இன்னும் தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது.   அதையொட்டி பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் விடுதிகளை மூடி உள்ளது.   மேலும் அனைத்து மாணவர்களையும் உடனடியாக விடுதிகளிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இங்குள்ள பெண்கள் விடுதிகளை விட்டு வெளியேற மறுத்துள்ளனர்.  பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சனிக்கிழமை முதல் ஜனவரி 5 வரை குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது.   பல மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.