சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசிற்கு பீட்டா அமைப்பினர் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு முதல் தொல்லை கொடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் பார்க்க வரும் மக்கள் கூட மாடு முட்டி உயிரிழப்பதாகவும் கூறியதுடன், கடந்த 2004ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்பட்ட உயிரிழப்பைச் சுட்டிக்காட்டி பீட்டா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கிளையில் தொடர்ந்த வழக்கு காரணமாகவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்தியஅரசு தடை போட்டது.
பின்னர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும், கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் ஒன்றுகூடி, சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் தொடர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு, தனிச்சட்டம் இயற்றி, அதற்கு மத்தியஅரசிடம் அனுமதி பெற்றது. இதையடுத்தே, தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பினால் போடப்பட்ட ஊரடங்கினால் கடந்த 2019ம் ஆண்டு டு ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறவில்லை.
இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே வருகின்றனர். தற்போது ஒமிக்ரான் தொற்று பரவலை காரணம் காட்டி, 2022 ஜனவரியில் நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பீட்டா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே, தமிழகஅரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு அரசு அனுமதி வழங்கிய நாள் முதல் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு 4 ஆயிரத்து 696 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தற்போது, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், ஒருபுறம் ஓமிக்ரான் பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது பொது மக்களுக்குக் கடுமையான உடல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஜல்லிக்கட்டு விளையாட்டைப்பார்க்க மக்கள் ஆர்வத்துடன் அதிகம் கூடும் போது சொல்ல முடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்க நேரிடும். அதனால், மக்களுக்கு அத்தியாவசியமற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டிற்கு இந்தாண்டு அனுமதி தரக்கூடாது என சுமார் 80 மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கவில்லை எனில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிச்சயம் ஒமிக்ரான் வேகமாக பரவும் என்றும், இதற்குத் தடை விதிப்பதோடு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.