சென்னை,
தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற , காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கி அவசர சட்டம் இயற்ற பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இருப்பதாவது:-
இந்த உலகில் இனம் சார்ந்த உரிமைகளை பறிப்பதை விட மிகக் கொடிய அடக்குமுறை எதுவும் இருக்க முடியாது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்ததன் மூலம் அந்தக் கொடிய அடக்குமுறை தமிழ் சமுதாயத்தின் மீது மூன்றாண்டுகளாக ஏவப்பட்டு வருகிறது.
காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தமிழக அரசும், அப்போது மத்தியில் புதிதாக பதவி ஏற்றிருந்த நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் தடையை நீக்கி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடையின்றி நடத்தியிருக்க முடியும்.
ஆனால், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சி களுமே இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதில் தான் ஆர்வம் காட்டின.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014-ம் ஆண்டு மே 7-ந்தேதி தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 12 நாட்களில், அதாவது மே-ந்தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அதன்பின் 18 மாதங்களுக்கு அம்மனு மீது விசாரணை நடத்தும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தவில்லை. அதனால் 2015-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.
அதன்பின் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. மீண்டும் கடந்த நவம்பர் மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது கேள்விக்குறி யாகியுள்ளது.
மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுத்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எந்த தடையும் ஏற்பட்டிருக்காது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மத்திய மந்திரியின் அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தி.மு.க. வாய்மூடி மவுனியாக இருந்தது.
இந்த அறிவிக்கை தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்க முக்கியக் காரணமாக இருந்தது. இவ்வாறு தி.மு.க.வும், காங்கிரசும் தான் ஜல்லிக்கட்டு தடைபட முக்கிய காரணமாக இருந்தன.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட துரோகங்கள் ஒருபுறமிருக்க, இப்போது உச்சநீதிமன்றமும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக உள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை குறித்த வழக்கு மட்டும் தான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் ளாக அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை.
ஒருவேளை தீர்ப்பு வழங்கப்பட்டால் கூட, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நீதிபதிகள் அப்போட்டியை அனுமதிப்பர் என்ற நம்பிக்கை இல்லை.
காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில், 1960-ம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம் தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நீக்க முடியும்.
எனவே, அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.