சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை மெரினா கடற்கரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன் லைட் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்கிறது.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதலே அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாடுபிடி வீரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று காலை போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள், பொதுமக்களை போலிசார் கைது செய்தனர்.

போராட்டக்காரர்களை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் போலிசார் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவலாக ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடக்கிறது.
இந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே அலங்காநல்லூரில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாணவர்கள், இளைஞர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களின் மூலம் இந்த போராட்டம் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரம் அடைந்து வருகிறது.
போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் மெரினா பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது செல்போன் லைட் வெளிச்சம் மூலம் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.