டில்லி,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு தடை கேட்டு மேனகா காந்தி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு தடை நீக்க கோரியும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற நிரந்தர தீர்வு காண கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக தமிழக அரசு மத்திய அரசின் ஆலோசனையின்பேரில், தற்காலிகமாக அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், போராட்டக்காரர்களில் சிலர் ஏற்க மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இயற்றப்பட்டிருக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பாரதியஜனதா கட்சியை சேர்ந்த மேனகா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“தமிழர்கள் கலாசாரத்தை மதிப்பதாக பிரதமர் மோடி கூறினார். பா.ஜ.கவை சேர்ந்த மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சரோ இனிமேல் ஜல்லிக்கட்டுக்கு பிரச்சினை இருக்காது என்றார். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படும் என்று கூறிவருகிறார்.
ஆனால் அதே பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான மேனகா காந்தி, தமிழக அரசின் அவசர சட்டத்தை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். இது பாரதியஜனதாவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது” என்று போராட்டக்காரர்கள் கொந்தளிக்கிறார்கள்.
மேலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 70க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கினை யாரேனும் தொடுத்தால், அதில் எங்களையும் இணைக்க வேண்டும் என்று கேவியேட் மனு அளித்துள்ளlது குறிப்பிடத்தக்கது..