சென்னை:

மிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு  தடைக்கு எதிராக தமிழகமே போர்கோலம் பூண்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் பல்வேறு நிபந்தனைகளின்படி அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டை தடை செய்ய மீண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும் சீண்டிப்பார்க்கிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக, கடந்த 2017ம் ஆண்டு தமிழகமே திரண்டது.  மெரினாவில் வரலாறு காணாத அளவில் மக்கள்  போராட்டம் நடைபெற்றது.  மெரினா கடற்கரையில் கடல் மண்ணுக்கு நிகராக மக்கள் வெள்ளம் கூடி மாபெரும் போராட்டம் நடத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.  அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில் புதிய  அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறை வேற்றப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பீட்டா அமைப்பு, இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது 8 பேர் இறந்துள்ளனர், ஏராளமான வீரர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஆய்வு செய்ததில் காளைகளை சுமார் 16 மணி நேரம் வரிசையில் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்துள்ளதாகவும், எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என கூறியுள்ளது.

பீட்டாவின் இந்த அறிக்கை தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளது.