டெல்லி:

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுப்பிய சட்ட வரைவுக்கு சிறிய திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதேபோல் சுற்றுசூழல் மற்றும் கலாச்சார துறை அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்து உள்துறைக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த சட்ட வரைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். இதற்காக கவர்னர் வித்யாசாகர் நாளை சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர சட்டம் நாளை அமலுக்கு வரும் நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என தெரிகிறது. தமிழக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.