டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாக காண அழைப்பு விடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வாதங்களை தமிழகஅரசு முன் வைத்துள்ளது.

தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும்  முயற்சித்து வருகிறது. ஏற்கனவே பீட்டாவின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்ட நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, மெரினாவில் கூடிய மக்கள் போராட்டம் காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டில் அதிமுக அரசு சிறப்புச்சட்டம் இயற்றியது. இதை மோடி அரசு ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கியது. ஆனால், மத்திய அரசு காட்சிப்படுத்ததப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து இன்னும் மாடுகளை நீக்கவில்லை.

இந்த நிலையில், பீட்டா தரப்பில் மீண்டும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது,  தமிழகஅரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதுடன், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ப்க அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் காளைகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும் என அழைப்பு விடுத்ததுடன்,  வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் இங்கே கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதை துன்புறுத்தல் என்று கூற முடியாது என்றும்,  நீதிபதிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்களை வழங்கியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஒரு மாநிலத்தின்  கலாசாரத்தை காப்பது அந்ததந்த அரசுகளின் கடமை என கூறியதுடன்,  ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாசாரத்தை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட என வலியுறுத்தி யதுடன், சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு, இது தமிழர்களின்  கலாசார அடையாளம் என்பதால் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டை காண வருகின்றனர் என்று தனது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக வைத்துள்ளது.