உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த வருடம் தடை தகர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்தியில் ஆளும் பாஜக பிரமுகர்கள் தெரிவித்துவந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் தடையை விலக்காததால் இந்த முறையும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இதனால் கொந்தளித்த மக்கல், தன்முனைப்பாக, தமிழகம் முழுதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறார்கள் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதாக தகவல் பரவியது.
இதையுடுத்து தமிழகம் முழுதுமிருந்து இளைஞர்கள் அலங்காநல்லூர் நோக்கி படையெடுத்தனர். இன்னொரு புறம் ஜல்லிக்கட்டு நடந்துவிடக்கூடாது என காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
முன்னெச்சரிக்கையாக அலங்காநல்லூர் பகுதியில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அலங்கா நல்லூர் வரும் பாதைகளில் செக்போஸ்ட் அமைத்து காவல்துறை கண்காணித்தது. அலங்காநல்லூரில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வாடிவாசல் அருகே சாமி கும்பிடுவதற்காக ஊா் பெரியவா்கள், மூன்று காளைகளை கொண்டு வந்தனா். காவல்துறையினரிடம், பூஜை மட்டும் செய்யப்போகிறோம் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் பூஜை முடிந்தவுடன் திடீரென அந்த காளைகளை அவிழ்த்து விட்டனா்.
இதனையடுத்து, அங்கு குழுமியிருந்த மாடுபுடி வீரா்கள், காளைகளை உற்சாகத்துடன் அடக்கத் தொடங்கினா். தொடா்ந்து அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டு நடத்தி வருவதால், அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினா், அவா்களை தடுக்க முடியாமல், திகைத்து நிற்கிறார்கள்.
வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவவதைப்போலவே இன்று ஜல்லிக்கட்டு நடப்பதால், மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு குழுமி நிற்கிறார்கள்.