சென்னை,

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழர்களின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அலங்கா நல்லூரில் வரும் 16ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைக்கிறார்கள்.

பொங்கலையொட்டி தென்மாவட்டங்களில்  நடைபெற உள்ள வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி குறித்து மதுரை ஆட்சியில் அலுவலகத்தில், ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் கடந்த 3ந்தேதி  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்ட எஸ்பி மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர்கள்  கலந்துகொண்டனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக, கடந்த ஆண்டு தமிழகமே திரண்டு மெரினாவில் வரலாறு காணாத அளவில் மக்கள்  போராட்டம் நடைபெற்றது.  அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில் புதிய  அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறை வேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்னும் 2 நாளில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக விலங்குகள் நல வாரியமும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் காளைகளை  கொண்டு வருபவர்களும், அதை அடக்க முயற்சிக்கும் இளங்காளைகளும், தங்கள் ஆதார் கார்டை காட்டி, தற்காலி அடையாள அட்டை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வரும் 16ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வரும், துணைமுதல்வரும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.