ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இந்த ஆண்டும் தமிழகத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இந்த ஆண்டாவது நடத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இச்சிக்கலில் இந்த ஆண்டும் தமிழகத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க முன்வராத மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்து அவர்களின் போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடும், வீரத்தோடும் கலந்து விட்ட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த இரு ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த மத்திய, மாநில அரசுகள், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்தன.
ஆனால், அதற்கான எந்த ஏற்பாட்டையும் மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்போதைய நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மட்டும் தான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டின் விதியை அது தான் தீர்மானிக்கும்.
நல்வாய்ப்புக் கேடாக அவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. வரும் 14-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டிய நிலையில் நாளையும், நாளை மறுநாளும் மட்டுமே உச்சநீதிமன்றம் செயல்படும். எனினும், அந்த இரு நாட்களிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.
இத்தகைய சூழலில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வாய்ப்புகள் இல்லை. அதனால் தான் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வசதியாக, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சரும் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், இந்த விஷயத்தை மத்திய அரசு உண்மையாக அணுகவில்லை. மாறாக மக்களை ஏமாற்றும் நோக்குடன் தான் செயல்படுகிறது. இவ்விஷயத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் நேற்று 3 விதமான கருத்துக்களைக் கூறியிருப்பது தான் இதற்கு சாட்சியாகும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தவே,‘‘ ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது. மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது’’ என கூறியிருக்கிறார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது,‘‘ ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு. இதை நடத்துவதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்க முடியும். ஷா பானு வழக்கில் அவ்வாறு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. இதுகுறித்து பல யோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்’’ என்று கூறினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து தமிழக மக்களுக்கு தவறான நம்பிக்கை ஊட்டி வந்த தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது அவசர சட்டம் பிறப்பித்தால் அது தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். இவை எதுவுமே உண்மையான அக்கறையுடன் சொல்லப்பட்டவையல்ல… மாறாக தட்டிக்கழிக்கும் நோக்குடன் சொல்லப்பட்டவை தான். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் கடும் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் இம்முறை எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தி விடும் முனைப்பில் உள்ளனர்.
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சென்னை கடற்கரையிலும், மதுரையிலும் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதும், தமிழகத்தில் பெரும்பாலான அரசு கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு பேரணியாக சென்றதும் இந்த உணர்வையே பிரதிபலிக்கின்றன. பல அமைப்புகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடையை மீறி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, இதைத் தடுக்கவும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவும் வசதியாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவும் வசதியாக மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.