மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரபலமான  மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் ஜல்லிக்கட்டுபோட்டி,  ஜனவரி 4ந்தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம்  தச்சங்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 14-ந்தேதி , 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,  போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக் கூடாது, காளைகளுக்குத் தேவையற்ற வலி மற்றும் கொடுமைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ள குழு நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை அரசு  ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.

இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள்  தொடங்கி உள்ள  நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் ஆன்லைனில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும். அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Jallikattu – Bull / Tamer Registration – ஜல்லிக்கட்டு காளை / காளையை அடக்குபவர் பதிவு என்ற பிரிவை க்ளிக் செய்யவேண்டும். பின், Jallikattu – Tamer Registration – ஜல்லிக்கட்டு காளையை அடக்குபவர் பதிவு க்ளிக் செய்யவேண்டும். அதனை க்ளிக் செய்த உடன் விண்ணப்பம் வரும் அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் உங்களிடம் இருக்கும் தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு : ஜல்லிக்கட்டிடு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் நாளை மாலை 5 மணிமுதல் நாளை மறுநாள் 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.