சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
முதல்வராக ஜெய்ராம் தாக்குர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல சட்டப்பேரவைக்கு கடந்த 9ந்தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் 44 இடங்களை பாஜக கைப்பற்றி, ஏற்கனவே ஆட்சி செய்து வந்த காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இன்று புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது. தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு, ஆளுநர் ஆச்சார்யா தேவ், பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 10 பேர் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
இவர் இமாச்சல பிரதேசத்தின் 14-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.