ரோதாக்

லாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் ராம் ரகீமுக்கு நன்னடத்தை காரணமாக பரோலில் வெளி வர சிறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

தேரா சச்சா சௌதா என்னும் சீக்கிய அமைப்பின் தலைவரான ராம்ரகீம் என்னும் சாமியார் மீது அவர் ஆசிரமத்தை சேர்ந்த பெண்கள் பலாத்கார புகார் அளித்தனர். இதில் முதல் புகார் கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு இந்த ஆசிரமத்தை சேர்ந்த பெண் சன்னியாசி புகார் அளித்தார். அதன் பிறகு மேலும் ஒரு பெண் பலாத்கார புகார் அளித்தார்.

இந்த ஆசிரம வளர்ச்சி குறித்தும் சாமியாரின் பாலியல் கொடுமைகள் குறித்தும் எழுதிய பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலையை நடத்தியதும் ராம் ரகீம் என புகார் எழுந்தது இந்த இரு வழக்கிலும் ராம் ரகீம் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த மாதம் 21 ஆம் தேதி தம்மை பரோலில் வெளியில் அனுப்பக் கோரி சாமியார் ராம்ரகீம் மனு அளித்திருந்தார். சிறை நிர்வாகம் அவர் நன்னடத்தை காரணமாக அவரை பரோலில் வெளியே அனுப்பலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து அரியானா அமைச்சர் கே எல் பன்வார், “இரு வருடங்கள் சிறை தண்டனை முடித்த குற்றவாளிகளுக்கு பரோலில் செல்ல உரிமை உள்ளது. சிறையில் அந்த கைதி நன்னடத்தையுடன் நடந்துக் கொண்டால் அது குறித்து சிறை நிர்வாகம் பரிந்துரை செய்வது வழக்கமான ஒன்றாகும்.

இந்த பரிந்துரை உள்ளூர் காவல் நிலைய அதிகாரி மூலம் காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்படும். இது குறித்து முழு விசாரணைக்கு பிறகு ஆணையர் இறுதி முடிவு எடுப்பார்” என தெரிவித்துள்ளார்.