தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரபல ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, மக்களுக்கும் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்த ஆலையை மூடக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நூறு நாள் போராட்டத்தை அறிவித்த அவர்கள், நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றார்கள்.
அப்போது கலவரம் மூண்டது. காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மறுநாளும் பதட்டமான சூழல் நிலவியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கிச்சூட்டை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவும் கண்டித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சிறிது நேரத்துக்குமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எந்த ஒரு காரியத்தை செய்தாலும் ஒருவருக்குப் பிடிக்கும் இன்னொருவருக்குப் பிடிக்காது. ஆகவே எந்த பிரச்சினையையும் அனைவரும் உட்கார்ந்து பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும்” என்றார்.
மேலும்,” பெரும் கூட்டம் சாலையில் சேர்ந்தால் தவறான திசையில் செல்ல வாய்ப்பு ஏற்படும்.
தவிர இந்த துப்பாக்கிச்சூட்டில் அரசியல் பிரமுகர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. அப்பாவி மக்கள்தான் உயிரைவிட்டிருக்கிறார்கள்.
காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணமடைந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார்.