டெல்லி:

பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கு ஜே.பி.நட்டா இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பாஜகவின் தேசிய தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.

பாஜகவின் தேசியத் தலைவராக இருந்து வந்த அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில், பாஜகவின்  செயல்தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டது.

பாஜக மத்திய தேர்தல் குழுத் தலைவர் ராதா மோகன் சிங் இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தால், அதில், பாஜக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை என்றும், வேட்புமனுக்கள் மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை ஆய்வு செய்யப்படும், பின்னர் மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை திரும்பப் பெறலாம் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நட்டாவின் பெயரை கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்பட பலர் முன்மொழிந்தனர். இதை  பாஜக தேசிய கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள்ஏற்றுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இஅன்று  காலை 11.30 மணி அளவில்  ஜே.பி.நட்டா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அவரை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய தேர்தல் குழுத் தலைவர் ராதா மோகன் சிங்  அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஜே.பி.நட்டா பாஜகவின் அதிகாரப்பூர்வ தேசிய தலைவராக பதவி ஏற்றார். அவருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜே.பி.நட்டா 1993 – 2012 வரை ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தவர். பாஜக வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்ட அவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.