அமராவதி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட இலவச நாப்கின் திட்டத்தை, ஆந்திர அரசு தற்போது தொடங்கி உள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

ஆந்திராவிர்லல் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவித்து உள்ள ஜெகன் அரசு, தற்பொழுது,  ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் இடைநிலைகள் கல்லூரிகளில் படிக்கக்கூடிய சுமார் 10 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பத்து சானிடரி நாப்கின்கள் வீதம்  வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதை குறைக்கும் விதமாகவும், மாணவிகளின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்ததிட்டம் கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும்,  சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கிராமங்களிலும் உள்ள 10 முதல் 19 வயது வரையுள்ள வளர் இளம் பெண்களுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க உத் தரவிடப்பட்டுள்ளது.