சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னதாக திகழ்ந்த திமுக அயலக பிரிவு முன்னாள் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சம்பந்தப்படுத்தி விமர்சனம் செய்ததை எதிர்த்து, முதலமைச்சர் சார்பில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னணியில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார். மேலும், இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் மனுவும் அளித்திருந்தார்.
அதுபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், ஜாபர் சாதிக்குடன் திமுக தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் தொடர்பில் இருந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், இதனால், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈபிஎஸ், அண்ணாமலை பேசியதாகவும் மனுவில் கூறியுள்ளதுடன், ஈபிஎஸ், அண்ணாமலை மீது கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால், எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றன. அதுபோல பல நாளிதழ்கள், வார இதழ்கள் மட்டுமின்றி ஆன்லைன் செய்தி சேனல்களும், திமுக தலைமை கடுமையாக விமர்சனம் செய்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகமீதான நம்பக்கத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முடக்கும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது முதலமைச்ச ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.